அமெரிக்காவில் 11 வயது சிறுவனை கத்தியால் குத்திய பேய்..! பரபரப்பை ஏற்படுத்திய திகில் சம்பவம்

அமெரிக்காவில் 11 வயது சிறுவனை கத்தியால் குத்திய பேய்..! பரபரப்பை ஏற்படுத்திய திகில் சம்பவம்

Update: 2021-09-28 05:30 GMT

அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் உள்ள பெரேயா பகுதியில், பேய் வீடு போன்ற கேளிக்கைத் தளத்தில், பேயாக நடித்துக்கொண்டிருந்த 22 வயது நபர், அங்கு வந்த 11 வயது சிறுவனைக் கத்தியால் குத்தினார்.

நைட் ஸ்க்ரீம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 7 ஃப்ளோர் ஆப் ஹெல் என்ற பேய் வீட்டுக் கேளிக்கைத் தளத்தில் சென்ற வாரம் அந்தச் சம்பவம் நடந்ததாக சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் அளித்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் கூறுகையில், “பேயாக நடித்த அந்த நபர் கத்தியைக் கையில் பிடித்துக்கொண்டு என் மகனை நோக்கி பயமுறுத்துவதற்காக நடந்து சென்றார்.

அப்போது அந்தக் கத்தி போலியானது, எனக்குப் பயம் இல்லை என்று சொல்லிக்கொண்டு என் மகன் நெருங்கி சென்றான். அப்போது கத்தியை கீழே குத்தும்போது, தெரியாமல் மகனின் பாதத்தில் வெட்டியது” என்று கூறினார்.

கத்தியானது சிறுவனின் செருப்பைத் துளைத்து அவனுடைய காலில் குத்தியது. அவனுக்கு ஊழியர்கள் உடனே மருத்துவ உதவி செய்து காயத்தைச் சுத்தப்படுத்தினர். இருப்பினும் அப்பெண் தனது மகனை தொடர்ந்து, அந்த பேய் வீட்டு கேளிக்கையை முழுவதுமாக முடித்து வெளியே அழைத்து வந்தார்.

பேய் வீடு கேளிக்கைத் தளங்களில், பேயாக நடிப்பவர்கள் உண்மையான ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறியதால், சிறுவனைக் கத்தியால் குத்திய பணியாளர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

கவனமின்றி பிறருக்குக் காயம் விளைவித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக பெரேயா காவல்துறையினர் கூறினர்.

Tags:    

Similar News