சிறுமி கொடூர கொலை.. நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய அநியாய இளைஞர் கைது !!
சிறுமி கொடூர கொலை.. நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய அநியாய இளைஞர் கைது !!
பள்ளி மாணவியை கொலை செய்த வழக்கில் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகளில் கூறப்படுகிறது. அங்கு விவசாயிகள் கூட்டத்தில் பாஜகவினர் காரை செலுத்தி 4 பேர் கொலை செய்த வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று உத்தரபிரதேச மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அங்கு பள்ளி மாணவிக்கு நடந்த சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்ஷஹர் பகுதியில் கடந்த வாரம் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தலையில் காயம், கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சாலையோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், இந்த வழக்கில் அதேகிராமத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அந்த இளைஞரும் கிராம மக்களுடன் போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து போலீசார் கூறுகையில், சிறுமி கொலை சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சிகப்பு கலர் டீ சர்ட் அணிந்த நபர் ஓடினார் என கிராம மக்கள் கூறினர். இதனைக்கொண்டு இந்த வழக்கு விசாரணையை நடந்து வந்தது. செல்போன் சிக்னல்களை கொண்டு கொலை நடந்த இடத்தில் இருந்த 300 செல்போன் அழைப்புகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்தப்பகுதிக்கு அருகாமையில் உள்ள 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுனில் என்ற 21 இளைஞரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது நண்பர்கள் இருவரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
அந்த இளைஞர் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமியை வழிமறித்து தனது காதலை வெளிப்படுத்தியதோடு போன் நம்பரை கேட்டும் தொந்தரவு செய்துள்ளனர். வழிவிடாமல் தடுத்து தொந்தரவு செய்ததால் கோபத்தில் அந்த சிறுமி இளைஞரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் அந்த இளைஞர், சிறுமியை கீழே தள்ளியதில் தலையில் அடிப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. மேலும் சுனிலின் நண்பர்கள் கழுத்தை இறுக்கி சிறுமியை கொலை செய்துவிட்டு தப்பியோடினர். தற்போது மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
newstm.in