தமிழக பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா! அமீரக அரசு கெளரவித்தது!

தமிழக பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா! அமீரக அரசு கெளரவித்தது!

Update: 2021-08-15 18:56 GMT

அமீரகத்தில், மதிப்புமிக்க நபர்களுக்கு 10 வருஷங்களுக்கு செல்லுப்படியாகக் கூடிய கோல்டன் விசா வழங்கி கெளரவிக்கும் வழக்கம் இருக்கிறது. அவர்கள் நாட்டின் சிறந்த முதலீட்டாளர்கள் , தொழிலதிபர்கள், மதிப்புமிக்க விருந்தாளிகள் என தேர்ந்தெடுக்கிற நபர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய கோல்டன் விசாக்களை வழங்கி கவுரவிக்கிறது. அந்தவகையில், அமீரகத்தில் வசிக்கும் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இத்தகையை கவுரவத்தைப் பெற்றுள்ளனர்.

இந்த விசாவை பெற்றவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் விசாவை புதுப்பித்தால் போதும். இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கவுரவமாக நடத்தப்படுவார்கள். தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை கவுரவிக்கவும், தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கவும், தொழிலறிவு படைத்த மக்களை ஊக்கப்படுத்தவும் இத்தகைய நடைமுறையை அமீரக அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், முதன் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது துபாய் அரசு.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த சையது பஃதா-நசிமா பேகம் தம்பதியின் மகள் நஸ்ரின் பேகம். இவர், கடந்த 2008-ம் ஆண்டு திருச்சி சங்கரா ஆயுர்வேதிக் கல்லூரியில் படித்து டாக்டரானார். இதையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு மருத்துவப் பணிக்காக துபாய் சென்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் (MOH) மருத்துவ உரிமம் பெற்றார். இந்நிலையில், சபீர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக துபாயில் ஆயுஸ் மெடிக்கல் டெரிட்ரி மேனேஜிங் பார்ட்னராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் துபாய் அரசு, நஸ்ரின் பேகத்திற்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கோல்டன் விசா பெற்ற முதல் பெண் டாக்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நஸ்ரின் பேகம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த கவுரவத்தை, என்னுடைய பெற்றோர் சையது பஃதா, நசிமா பேகம் இருவருக்கும் சமர்ப்பிக்கிறேன்” என, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News