அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி, வாரிசுகளுக்கும் உண்டு.. தமிழக அரசு அறிவிப்பு..!
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி, வாரிசுகளுக்கும் உண்டு.. தமிழக அரசு அறிவிப்பு..!
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி, அரசு ஊழியர்கள், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழக பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படும் இதில், 4 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
இந்த திட்டம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், மீண்டும் யுனைடெட் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 2021-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 2025-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையிலான 4 ஆண்டுகளுக்கு அமல்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, “தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் அவர்களின் வயது வரம்பைக் கருத்தில் கொள்ளாமல் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும்.
அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின்படி இடர்பாடுகள் ஏதுமின்றி பயன்பெற எதுவாக, அவர்களுக்கு உதவிடும் வகையில் தனி தொலைபேசி உதவி மையம் ஒன்று அமைக்கப்படும்” என்று, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், அதை செயல்படுத்தும் விதமாக, அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.