நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை மூன்று தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. கொரோனா தொற்றுக்காக பெருமளவு தொகை செலவு செய்யப்படுவதாலும், போதிய நிதியாதாரம் இல்லாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஓராண்டு இடைவெளிக்குப்பின், மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். ஏராளமான அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால் நேரடியாக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
Tags: