உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு அரசு வேலை ! முதல்வர் அறிவிப்பு !!

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு அரசு வேலை ! முதல்வர் அறிவிப்பு !!

Update: 2021-01-23 18:50 GMT

விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி அருகே, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கு மேலாக கடும் பனி, குளிர் ஆகியவற்றை பாராமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கடும் குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், இதில் அனைத்திலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. மாறாக 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்விலேயே முடிந்தது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின்  குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, மத்திய அரசு மிகுந்த பெரும்பான்மையுடன் உள்ளதால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறது. இது ஜனநாயக நாடு. சர்வாதிகார நாடு அல்ல. இது காலம் உணர்த்தும்.

மேலும், பாஜக பலமிக்கதாக உள்ளதால் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டங்களை இயற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின்  வாக்கெடுப்பு கூட நடத்தாமல் சட்டத்தை இயற்றி வருகிறது. புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பாஜகவும், அதன் தலைவர்களும் பொய்களை மட்டுமே பரப்பி வருகின்றனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யமறுப்பது மனிதாபிமானம் அற்றது. அது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்.

ஒவ்வொரு நாளும் கடுங்குளிர் காரணமாக விவசாயிகளை இழந்து வருகிறோம். இதுவரை சுமார் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், பஞ்சாப்பைச் சேர்ந்த 76 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பஞ்சாப் அரசு அரசு வேலை வழங்கும் என்றார். 

Tags:    

Similar News