டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை- அரசு புதிய உத்தரவு !
டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை- அரசு புதிய உத்தரவு !
தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை என்பது அம்மாநில அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. காற்று மாசு காரணமாக மக்கள் பல்வேறு அவதிகளை சந்தித்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முதலில் நவம்பர் 21ஆம் தேதி வரை புதிதாக கட்டுமானம் கட்டுவதற்கும், கட்டுமான இடிப்பு பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 26ஆம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. எனினும் காற்றின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு சீரடையவில்லை. எனவே, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
எனினும், காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதால் கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடையானது, மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று அறிவித்துள்ளார். அதேசமயம், பிளம்பிங் வேலை, உட்புற அலங்காரம், மின்சார வேலை மற்றும் தச்சு வேலை போன்ற மாசுபடுத்தாத கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து பிற லாரிகள் நுழைவதற்கான தடை டிசம்பர் 7ஆம் தேதி வரை தொடரும், அதே நேரத்தில் எரிவாயுவால் இயக்கப்படும் லாரிகள் மற்றும் மின்சார லாரிகள் டெல்லிக்குள் நுழைய தடையில்லை என்றும் அமைச்சர் கூறினார். கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில், மூடப்பட்டிருந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. நகரின் 14 பகுதிகளில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்புகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக, அரசு சிறப்பு பேருந்து சேவையையும் தொடங்கியுள்ளது.
newstm.in