“அவர் ஒரு இந்துவே அல்ல..!” - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

“அவர் ஒரு இந்துவே அல்ல..!” - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

Update: 2021-07-05 13:32 GMT

“இங்கு அரசியலால் சில பணிகளை செய்ய முடியாது. அதன் மூலம் மக்களை இணைக்க முடியாது. அரசியல் எப்போதும் மக்களை இணைக்கும் கருவியாக இருக்காது” என, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில்நேற்று  நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நாம் அனைவரும் கடந்த 40,000 ஆண்டுகளாக ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

இந்தியத் தேசத்தின் மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான். எனவே, இந்துக்களும், இஸ்லாமியர்களும் வேறு வேறு குழுக்கள் அல்ல. ஏற்கெனவே இணைந்துதான் இருக்கிறார்கள். எனவே, அவர்களை இணைப்பதற்கு புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

இங்கு, அரசியலால் சில பணிகளைச் செய்ய முடியாது. அதன் மூலம் மக்களை இணைக்க முடியாது. அரசியல் எப்போதும் மக்களை இணைக்கும் கருவியாக இருக்காது. அது மக்கள் இடையிலான ஒற்றுமையைச் சிதைக்கும் ஆயுதமாக எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்துவே அல்ல. பசு, புனிதமான விலங்குதான்; ஆனால் மற்றவர்களைக் கொலை செய்பவர்கள் கூட இந்துத்துவா தத்துவத்துக்கு எதிரானவர்களே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகையவர்களைச் சட்டம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்க வேண்டும்.

மேலும், நாம் இந்தியாவில் வாழ்கிறோம், இங்கு இந்துவோ, இஸ்லாமியரோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது; இந்தியர்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும். தற்போது, இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் உள்ளது போன்ற மாய பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

ஆனால், நாம் அந்த சதி வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது. இங்கு இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். இந்தியாவில் ஒற்றுமை இல்லையென்றால் வளர்ச்சி என்பது துளியும் சாத்தியமில்லை. எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்கள் இயக்கத்துக்குக் கட்சி அரசியலில் விருப்பமில்லை. தேசத்தின் நலனே எங்களுக்கு முக்கியம்" என்றார்.
Tags:    

Similar News