ராஜேந்திர பாலாஜி தப்பிச்செல்ல உதவி? அதிமுகவினர் இருவர் அதிரடி கைது !
ராஜேந்திர பாலாஜி தப்பிச்செல்ல உதவி? அதிமுகவினர் இருவர் அதிரடி கைது !
தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்பில் பேசிக் கொண்டிருந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் பதவியில் இருக்கும்போதே பல்வேறு சர்ச்சைகள், புகார்களில் சிக்கிய நிலையில், அப்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பின்னர் ஆட்சி மாறியது.
இந்த நிலையில், ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கடந்த 17ஆம் தேதி கைது செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் களத்தில் இறங்கினர். ஆனால் அவர் தலைமறைவாகினார். இதனால் 8 தனிப்படைகள் அமைத்து 12 வது நாளாக தனிப்படை தேடி வருகிறது.கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவருக்கு எதிராக கடந்த 23ஆம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது ராஜேந்திரபாலாஜி தர்மபுரி, கிருஷ்ணகிரி,வேலூர், ஓசூர் ஆகிய பகுதியில் பதுங்கி உள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தினர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொண்டு உதவி செய்ததாக அதிமுகவினர் சிலரிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. திருப்பத்தூர் அடுத்த அக்கரகாரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், ராஜேந்திர பாலாஜியை நெருங்கியுள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
newstm.in