அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு!
அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு!
அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க உயர்கல்வித்துறைக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க பல்கலைக்கழகங்களுக்கு தடை விதித்து ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலமாக தேர்வுகளை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி மாநில உயர்கல்வி துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அண்ணா பல்கலைகழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்வி வாரியம் ஆகியவை தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு ரத்து தொடர்பான தமிழக அரசின் உத்தரவை ஏற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரியர் தேர்வு மாணர்வகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மதிப்பீடுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நடத்தப்படும் துணை தேர்வுகளில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்ட துணை தேர்வுகளில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்கள் ஆகியோர் தேர்வு எழுதியுள்ளனர் என்றும் தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டது.
மேலும் இது தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பாக உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.