‘ஹிப் ஹாப்’ ஆதியின் யூ-டியூப் சேனல் முடக்கப்பட்டது..!
‘ஹிப் ஹாப்’ ஆதியின் யூ-டியூப் சேனல் முடக்கப்பட்டது..!
தமிழில் வெளியான முதல் ஹிப் ஹாப் ஆல்பம் ‘ஹிப் ஹாப் தமிழன்’. இந்த ஆல்பத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் பிரபலமானவர் ‘ஹிப் ஹாப்' ஆதி. தமிழ்த் திரையுலகில் பாடகராக அறிமுகமாகி, பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என வளர்ந்துள்ளார்.
‘வணக்கம் சென்னை’, ‘எதிர் நீச்சல்’, ‘கத்தி’ உள்ளிட்ட படங்களில் பாடியுள்ள ‘ஹிப் ஹாப்' ஆதி, ‘ஆம்பள’, ‘இன்று நேற்று நாளை’, ‘தனி ஒருவன்’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
நடிப்பு, இயக்கம், இசை என பணிபுரிந்து வந்ததால் தனியாக ஆல்பங்கள் எதையும் உருவாக்காமல் இருந்தார் ‘ஹிப் ஹாப்’ ஆதி. தற்போது, இந்த கொரோனா ஊரடங்கில் புதிதாக ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். ‘நான் ஒரு ஏலியன்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தின் உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின வெளியீடாக இந்த ஆல்பம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் யூ-டியூப் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அவருடைய யூ-டியூப் சேனலின் பெயர் ‘Algorand Social News’ என மாற்றப்பட்டு, ஆதி பதிவிட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. இது, அவருடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.