இனி செயலி மூலமே விடுமுறை அறிவிப்பு.. முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார் !!
இனி செயலி மூலமே விடுமுறை அறிவிப்பு.. முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார் !!
24 மணி நேரமும் பணி செய்து வரும் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அதற்கான அரசாணையையும் அரசு வெளியிட்டது. அதில், வார விடுமுறை அந்தந்த காவல் நிலைய பணிச் சூழலைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம். அந்த வாரம் விடுப்பு எடுக்கும் காவலரின் பெயர் விவரங்கள் காவல் நிலைய நோட்டீஸ் போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றுக் காவலரை பணியில் அமர்த்துவதற்கு ஏதுவாக இருக்கும். இதற்கான உத்தரவை டிஜிபி உடனடியாக அமல்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல்துறை உருவாக்கிய விடுப்பு செயலியை (CLAPP) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். செயலி மூலம் இரண்டாம் நிலை முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் 49.74 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க. இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
newstm.in