வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!
வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலின் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வரும் 14ம் தேதி அன்று திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தற்போது தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் போக்குவரத்து, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் என அனைத்து செயல்பாடுகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் அனைத்தும் முறையான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் மீண்டும் திறக்கப்பட்டு தரிசனங்கள் மற்றும் பூஜைகள் என அனைத்தும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் டிசம்பர் 3ம் தேதி அன்று வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு வழிபாடு சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபத வாசல் திறப்புடன் முடிவடைவது வழக்கம்.
அதாவது, 108 வைணவ தலங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிசம்பர் 14ம் தேதி அன்று அதிகாலை 4.45 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலின் சொர்க்கவாசல் திறக்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் வரும் 14ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக டிச.18ம் தேதி பணி நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.