சதமடித்த பெட்ரோல் விலை! நிஜமான காரணம் தான் என்ன?
சதமடித்த பெட்ரோல் விலை! நிஜமான காரணம் தான் என்ன?
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசலுக்கான விலை குறையும் என்கிற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எரிவாயு பயன்பாட்டுக்கான விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்வதற்கு மூன்று நிலைகள் உள்ளன. அவை மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, முகவர்கள் முடிவுசெய்யும் டீலர் கமிஷன், மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி ஆகியவை ஆகும். இதில் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில் எரிவாயுக்களின் விலையில் மாறுதல் ஏற்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கான முதல் நடைமுறை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இருந்து தொடங்குகிறது. கடந்த பிப். 16ம் தேதி வெளியான நிலவரப்படி இங்கு எரிவாயுக்கான விலை மற்றும் வரி விதிப்புமுறைகள் கணக்கிடப்பட்டுள்ளன. அன்று சர்வதேசளவில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரலுக்கு ரூ. 4560-ஆக இருந்தது.
ஒரு பேரல் என்பது 159 லிட்டரை உள்ளடக்கியது. இதை நாம் ஒரு லிட்டர் என்ற கணக்கில் வாங்குகிறோம். கடந்த 16ம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்யின் விலை ரூ. 28.68-ஆக இருந்தது. அதை நாம் அப்படியே பயன்படுத்த முடியாது. சுத்திகரிப்பு செய்ய வேண்டும். கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்வதன் மூலம் நாம் பெட்ரோல், டீசல் மற்றும் தார் போன்றவற்றை பெறுகிறோம்.
கடந்த 16ம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய்யை பெட்ரோலுக்கு சுத்திகரிக்க லிட்டருக்கு ரூ. 3.14 செலவானது. அதேபோல டீசலுக்கு சுத்திகரிக்க லிட்டருக்கு ரூ. 4.78 ஆனது. இதுவும் அடிப்படை விலையில் எடுத்துக்கொள்ளப்படும். இதை வைத்தே லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாம் தோராயமாக அணுமானிக்க முடியும்.
சுத்திகரிப்பை தொடர்ந்து வரி வரம்புகள், எரிவாயுக்கான அடிப்படை விலையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் போக்குவரத்து செலவை ஈடு செய்வதற்கான கலால் வரியை விதிக்கிறது. அதை தொடர்ந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டுவர உதவும் முகவர்களுக்கான கமிஷனும் விலையில் அடங்குகிறது. இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 3 வரை கமிஷன் விதிக்கப்படுகிறது.
மேலும் மாநில அரசு சார்பில் விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி என்கிற வாட் வரி சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரி நடைமுறையும் ஒரு காரணமாக உள்ளது. அதனால் தான், இருவரும் தங்களுடைய வரி விதிமுறைகளை குறைக்க வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்து வருகிறது.
மத்திய அரசு லிட்டர் பெட்ரோலுக்கு விதிக்கும் கலால் வரி மற்றும் சாலை செஸ் ரூ. 19.48-ஆக உள்ளது. அதேபோல டீசலுக்கு ரூ. 15.33-ஆக உள்ளது. சுத்திகரிப்பு, வரி விதிமுறைகள், கமிஷனுக்கு பிறகு லிட்டர் பெட்ரோல் ரூ. 71.18- ஆகவும், லிட்டர் டீசல் ரூ. 72.02-ஆகவும் உள்ளன. பிறகு மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பு நடைமுறையும் சேர்த்துக்கொள்ளப்படும். லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 20.05 மற்றும் டீசலுக்கு ரூ. 12.99 மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த பிப். 16ம் தேதி நிலவரப்படி லிட்டர் பெட்ரோல் ரூ. 91.68-ஆகவும், டீசல் ரூ. 85.01-ஆகவும் விலை ஏற்றம் கண்டன.
மதிப்புக் கூட்டு வரி என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடு. இந்தியாவில் அதிகளவில் வாட் வரியை விதித்துள்ள மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். இங்கு 39 சதவீதம் வாட் வரி நடைமுறையில் உள்ளது. அதை தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திராவில் 36 சதவீதம் வாட் வரி நடைமுறை பின்பற்றப்படுகிறது. மேலும் தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகாவில் 32 சதவீத வாட் வரியும், அசாமில் 31 சதவீதம் வாட் வரியும் நடைமுறையில் உள்ளது.