வேலையை விட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்!
வேலையை விட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்!
வேலையை விட மறுத்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் இட்டேரியைச் சேர்ந்த வித்யா (27) என்பவர் நெல்லையில் உள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். ஏற்கனவே வித்யாவிற்கு திருமணமான நிலையில் இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் உயிரிழ்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கணவன் செய்த மத்திய அரசு பணி அவருக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வித்யாவிற்கும் நெல்லை மாவட்டம் முதலைகுளத்தைச் சேர்ந்த நயினார் என்பவருக்கும் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் நயினார் தற்போது வேலையில்லாமல் இருந்து வருவதோடு கடந்த சில நாட்களாக மனைவியையும் வேலைக்கு செல்லவேண்டாம் என வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஏற்கமறுத்த வித்யா பிடிவாதமாக வேலையை விட மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் நயினாருக்கும், வித்யாவுக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்துவந்துள்ளது.
இதற்கிடையில், வீட்டில் தனது குழந்தையுடன் வித்யா தனியாக இருந்தபோது இது தொடர்பாக மீண்டும் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கத்தியால் வித்யாவை கழுத்தையறுத்து கொலை செய்துவிட்டு, தனது 4 மாத மகளை கையில் எடுத்துகொண்டு நயினார் தப்பியோடிவிட்டார். இந்த நிலையில் 4 மாத கை குழந்தையுடன் சென்ற நயினார் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் குழந்தையை ஒப்படைத்துவிட்டு சிறிது நேரத்தில் வருவதாக சொல்லிச் சென்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த உறவினர் நயினார் மனைவிக்கு போன் செய்தபோது தொடர்பு கிடைக்காத நிலையில் அங்கிருந்து புறப்பட்டு வித்யா வீட்டிற்கு வந்தபோது, வித்யா வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.
சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த காவல்துறையினர், வித்யா உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து நயினாரை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு வேறேதும் காரணம் உள்ளதா எனவும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
newstm.in