கொரோனா தலை தூக்கிய போது இது சாதாரண ஒன்று தான் என நானும் நினைத்தேன்... ஆனால்

கொரோனா தலை தூக்கிய போது இது சாதாரண ஒன்று தான் என நானும் நினைத்தேன்... ஆனால்

Update: 2021-05-17 21:32 GMT

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தினம் தினம் பல உயிர்களை பறித்து வருகிறது. தினந்தோறும் காலை மக்களுக்கு நன்கு அறிமுகமான நபர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்து கொண்டே இருக்கிறது. 

தற்போது கொரோனா 2-வது அலை பலரையும் காவு வாங்கி வருகிறது. இதன்படி கே.வி.ஆனந்த், பாண்டு, பாடகர் கோமகன், நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் என கொரோனாவால் உயிரிழந்த திரைப்பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது.

இந்நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.முன்னதாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான நிதிஷ், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணி அளவில் உயிரிழந்தார். நிதிஷ் வீரா. கடைசியாக விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்தார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

நடிகர் நிதிஷ் வீராவின் கொரோனா மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் நிதிஷ் வீராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் வீடியோ ஒன்றை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, "நடிகர் நிதீஷ் வீராவை, 'புதுப்பேட்டை' படத்தில் நடித்து கொண்டிருக்கும் காலத்திலேயே எனக்கு தெரியும்.அவருக்கு உடல்நலம் சரியில்லை என்கிற தகவல் வந்தபோது, இன்னும் இரண்டு நாட்களில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வரும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இன்று காலை 6 மணிக்கு அவர் உயிரிழந்தார்.மேலும் கொரோனா என்கிற நோய் தொற்று கடந்த ஆண்டு தலை தூக்கிய போது, இது சாதாரண ஒன்று தான் என நானும் நினைத்தேன். ஆனால் இந்த ஆண்டு நெருக்கமான பல இழப்புகள் நேர்ந்து வருகிறது. தயவு செய்து அனைவரும் முக கவசம் அணியுங்கள்,மூக்கிற்கு கீழ் முகக்கவசம் அணியாதீர்கள் என்று கூறியுள்ளார்.முகநூல் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

Full View
 

Tags:    

Similar News