என்னை துக்கத்தில் ஆழ்த்திவிட்டது... விவேக் மறைவுக்கு இளையராஜா உருக்கமான அஞ்சலி !!
என்னை துக்கத்தில் ஆழ்த்திவிட்டது... விவேக் மறைவுக்கு இளையராஜா உருக்கமான அஞ்சலி !!
படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்த நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் நேற்று அதிகாலை காலமானார்.
இதனால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனிடையே அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதை எடுத்து இவரின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவேக் மறைவிற்கு இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், நடிகர் விவேக்கின் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் காலையிலிருந்து இப்போது வரை அந்த துக்கத்திலேயே என் மனம் அழிந்துவிட்டது. காரணம் நடிகர் விவேக் என் மீது மிகுந்த மரியாதையும், மிகுந்த அன்பையும் அளவற்ற அபிமானமும் வைத்திருந்த ஒரு நபர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே அவர் எனது ரசிகராக இருந்துள்ளார். பின்னால் அபிமானியாக மாறி, பின்னாளில் பக்தராக மாறக்கூடிய அளவுக்கு அவர் என்னை நேசித்துள்ளார். அவர் என்னென்ன செய்lது கொண்டிருக்கிறார் என்பதை என்னிடம் சொல்வார். நானும் அதைக் கேட்டுவிட்டு, அவரை ஊக்கப்படுத்தி, மற்ற காரியங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தேன்.
சம்பத்தில் கூட என்னை ஸ்டுடியோவில் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். சில வேலைகளுக்காக என்னிடம் அனுமதிகூட வாங்கி சென்றிருந்தார்.அவர் என் மீது வைத்திருந்த அன்பையும் அபிமானத்தையும் இன்னொரு ரசிகனிடம் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் அவரின் மறைவில் வேதனை அடைந்து இருப்பீர்கள். உங்கள் துக்கத்தில் நான் பங்கெடுக்க முடியாது. அதேபோல எனது துக்கத்தில் நீங்கள் பங்கெடுக்க முடியாது. அவரவர் துக்கம் எல்லாம் அவரவருக்குத் தான்.
இருந்தாலும், நடிகர் விவேக்கின் குடும்பமே என் மீது பாசம் வைத்திருந்தது ஒரு குடும்பம். அவருடைய மறைவு எல்லோருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியது போல அவரது குடும்பத்தினருக்கும் அளவற்ற துக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இந்த துக்கத்திலிருந்து அந்த குடும்பத்தார் மீண்டு வர வேண்டும் என நான் இறைவனைப் பிராத்திக்கிறேன். நடிகர் விவேக்கின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன். விவேக்கின் குடும்பத்திற்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/Ilaiyaraaja/videos/297490961871913/
newstm.in