கையை ஒடிப்பேன்.. மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!

கையை ஒடிப்பேன்.. மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!

Update: 2021-12-17 18:35 GMT

திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் இன்று (17-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, “ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்தான் திமுகவினர் கவனம் உள்ளது. ஜனவரியில் உதயநிதி அமைச்சர், அதன் பிறகு துணை முதல்வர், அதன் பிறகு முதல்வர். பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதாகக் கூறினர். ஆட்சிக்கு வந்து 7 மாதங்களாகியும் வழங்கவில்லை. காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை.

அம்மா மருந்தகம், அம்மா உணவகம் ஆகியவற்றை மூடினால் திமுகவுக்கு முடிவு கட்டப்படும். கல்வெள்ளி கொலுசு கொடுத்தும், முன்பு அரவக்குறிச்சியில் 3 சென்ட் நிலம் கொடுப்பதாகவும், ரூ.2,000 டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் ஒருவர். ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் கொடுத்தவர். மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் 11.05 மணிக்கு மாட்டு வண்டிகளில் ஆற்றில் மணல் எடுக்கலாம் என்றார். அவர்கள் கடிகாரத்தில் மணி 11.05 ஆகவில்லை போலும். 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் மனதில் நினைக்க வைத்துள்ளனர்.

கரூர் சுற்றுவட்டச் சாலை என 10 ஆண்டுகளாகக் கூறிக்கொண்டுள்ளனர். திமுக அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்குகள் உள்ளன. அந்தமானில் முதலீட்டு விவரங்களை மத்திய அரசு திரட்டிக்கொண்டுள்ளது. விரைவில் ஒரு அமைச்சர் கம்பி எண்ணவேண்டி இருக்கும். குட்கா, கஞ்சா, கந்துவட்டி என அதிமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு வருகின்றனர். கட்சிக்காரனைத் தொட்டால் கையை ஒடிப்பேன். கட்சிக்காரர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்னால் நிற்பேன். இந்தக் கட்டப் பஞ்சாயத்து ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்.

கரூர் எஸ்.பி. கரை வேட்டி கட்டாத கூடுதல் மாவட்டச் செயலாளராக உள்ளார். டிஎஸ்பி நகரச் செயலாளர், இன்ஸ்பெக்டர்கள் ஒன்றியச் செயலாளர்களாக உள்ளனர். விரைவில் ஆட்சி மாற்றம் வரும் அப்போது தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

Similar News