பெண் பயணிகளை உதாசீனப்படுத்தினால்.. டிரைவர், கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை..!
பெண் பயணிகளை உதாசீனப்படுத்தினால்.. டிரைவர், கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை..!
கடந்த ஜூன் மாதம் முதல் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமலானது. இத்திட்டத்தால், கடந்த டிசம்பர் 25ம் தேதி வரை 40 லட்சம் பேர் இலவசமாக பயணித்துள்ளனர். இதனால், போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை சரிசெய்ய, முதல் கட்டமாக 1,330 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியது.
இந்நிலையில், பஸ் பயணம் குறித்து பெண்களிடம் தர மதீப்பிட்டு அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்படும் படிவத்தில், 'டிரைவர் உரிய ஸ்டாப்பில் நிறுத்தி பயணியை ஏற்றினார், இறக்கினார். கண்டக்டர் இலவச பயண சீட்டை வழங்கினார்; பஸ் ஸ்டாப்புக்கு முன்பே இறக்கி விடும்படி விசில் அடித்தார்; கனிவாக நடந்து கொண்டார்; டிரைவர், கண்டக்டர் அணுகுமுறை எப்படி' என்ற கேள்விகளுக்கு, 'ஆம், இல்லை' என பதில் சொல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பஸ் சேவை குறித்த கருத்து, பயணியின் முகவரி, மொபைல் எண் மட்டுமின்றி, 'நன்று, மிக நன்று, சராசரி, திருப்திகரமாக இல்லை' என்ற தர மதிப்பீடும் கேட்கப்படுகிறது. இத்திட்டம், கோவை கோட்டம், ஈரோடு மாவட்டத்தில் துவங்கிய நிலையில், நாளை முதல் பிற கோட்டங்களில், அமல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பெண் பயணியரை ஏற்றுவதில்லை; சரியான முறையில் பேசுவதில்லை என புகார்கள் வந்தபடி உள்ளன. பஸ்களில் ஒரு பெண் பயணியை ஏற்றி, இறக்கினால், போக்குவரத்து கழகத்துக்கு 16 ரூபாய் வருமானம் உள்ளது. அதை மனதில் வைத்து, பெண் பயணியரை ஏற்றி, இறக்க வேண்டும். தேவையற்ற வார்த்தை பேசக்கூடாது. மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.