சூரியன் என்று சொன்னாலே அது சக்திதான்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!
சூரியன் என்று சொன்னாலே அது சக்திதான்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!
தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் மூலம் 10 கோடி ரூபாயில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகம்; மதுரை காமராஜர் பல்கலையில் 7.25 கோடி ரூபாயில் சூரிய சக்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் துவக்க விழா சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்தது.
புதிய நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பேசியதாவது: “ஆளில்லா வான்வழி வாகன கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலையின் ஒரு மெகாவாட் சூரிய சக்தி மையத்தை துவக்கியுள்ளேன். இங்கும் சூரிய சக்தியைதான் துவக்கி வைத்துள்ளேன்.
சூரியன் என்று சொன்னாலே அது சக்திதான். சூரியன் என்ற சொல்லையும், சக்தி என்ற சொல்லையும் யாராலும் பிரிக்க முடியாது. நான் அரசியல் பேசுவதாக யாரும் கருத வேண்டாம்; அது தேவையுமில்லை. சூரிய சக்தியை உருவாக்கும் மையத்தை நான் குறிப்பிடுகிறேன்.
நாளுக்கு நாள் மின் தேவை அதிகமாவதால், அனைத்து பல்கலைகளும் இந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கல்வியில் சிறந்த தமிழகம் என்ற பட்டம் நமக்கு போதாது. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்த தமிழகம் என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும். அதற்கேற்ப உயர்கல்வித் துறை செயல்பட வேண்டும்” என அவர் பேசினார்.
முன்னதாக, புதிய வான்வழி வாகன கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் என்ற ஆளில்லா விமானங்கள் பல்கலை மைதானத்தில் இயக்கி காட்டப்பட்டன. அவற்றை முதல்வர் பார்த்து, அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.