தேசியக்கொடியை அவமதிப்பு செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை !!
தேசியக்கொடியை அவமதிப்பு செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை !!
இந்தியாவில் பொது நிகழ்ச்சிகளில் தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் போன்றவற்றை உபயோகிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இதற்குரிய மரியாதையை சரியான முறையில் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்திய கொடி குறியீடு2002 மற்றும் தேசிய கவுரவங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முக்கியமான தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக்கொடியை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த நிகழ்வுகள் நிறைவடைந்த பின் தேசியக் கொடிகளை தரையில் வீசிவிட்டு செல்வது தவறு. தேசியக்கொடிக்கு உரிய கண்ணியத்துடன் தனிப்பட்ட முறையில் மரியாதையுடன் அவற்றை அப்புறப்படுத்தலாம்.
பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் முன்னிலையில் தேசியக்கொடியை எரித்தல், சிதைத்தல், அழித்தல் போன்ற அவமதிப்பு செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். இதைப்போல தேசியகீதம் பாடுவதை தடுப்பவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை அல்லது அபராதமும் விதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.