வாழ்வா சாவா கட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள்.. இந்திய அணியில் இருக்கும் மாற்றம் !
வாழ்வா சாவா கட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள்.. இந்திய அணியில் இருக்கும் மாற்றம் !
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. முதல் ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் சந்தித்தது.
இந்த நிலையில், இந்திய அணி தனது 2ஆவது போட்டியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நியூசிலாந்துடன் துபாயில் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா-சாவா? மோதல் போன்றது. இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் இதில் தோற்றால் அரைஇறுதி வாய்ப்பு மங்கிபோய்விடும். அதுவே நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் அந்த அணிக்கான அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். இதையொட்டி இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமாரின் ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இது குறித்து இந்திய முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசவில்லை. ஒரு பேட்ஸ்மேனாகவே அவர் அணியில் நீடித்தார். தோள்பட்டை பிரச்சினை காரணமாக அவர் பந்து வீச முடியாமல் போனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவரை வெளியே உட்கார வைத்து விட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிக்கலாம். இஷான் கிஷன் சூப்பர் பார்மில் இருக்கிறார். நானாக இருந்தால் பாண்ட்யாவை காட்டிலும் இஷான் கிஷனின் பெயரையே பரிசீலனை செய்வேன்.
இதே போல் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்குரை சேர்ப்பது குறித்து யோசிக்கலாம். இதற்கு மேல் அணியில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் நாம் பயந்து விட்டதாக எதிரணியினர் நினைப்பார்கள்.
தற்போதைய நிலையில் பீதியடைய தேவையில்லை. ஏனெனில் இந்தியா சிறந்த அணி. முதல் ஆட்டத்தில் ஒரு சிறந்த அணியிடம் தான் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதற்காக இந்தியா அடுத்த ஆட்டத்திலோ அல்லது கோப்பையோ வெல்ல முடியாது என்று அர்த்தம் கிடையாது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறிவிட முடியும். அதன்பிறகு இறுதிப்போட்டிக்கு கூட நுழைய வாய்ப்பு உண்டு. எனவே அணியில் அதிக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்தார்.
இதேபோல் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ கூறுகையில், இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினின் அனுபவம் தேவை. அஸ்வின் பல இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் என்று கூறிய அவர், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அஸ்வினை களமிறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
newstm.in