இந்தியாவில் முதல் அலை கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தியதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. எனினும் அதன்பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உச்சத்துக்கு வந்த சமயத்தில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. 

எனினும் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதால் மாநிலங்களுக்கு நெருக்கடி இல்லாமல் மத்திய அரசு தடுப்பூசி வழங்குகிறது. 

இந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாலும், தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய உள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா நேற்று வெளியிட்டார். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் செளமியா சுவாமிநாதன் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், தடுப்பூசி ஏற்றுமதி அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வரவேற்கிறது. உலகளாவிய தடுப்பூசி வழங்கலில் சமநிலையை அடைய இது உதவும் என தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags: