இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் நூதன முறையில் வழிப்பறி!!
இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் நூதன முறையில் வழிப்பறி!!
அரியலூரில் நூதன முறையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பெண்கள் பயணிப்பது வழக்கம். அவர்களிடம் துப்பட்டா வண்டியில் மாட்டியுள்ளது என்று கூறி சிலர் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.
நூதன முறையில் ரசாயன பொடி தூவி கொள்ளையடிக்கும் அவர்கள் தொடர்ந்து காவல்துறையினரிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் செந்துறையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பழனியம்மாள் (50) என்ற பெண்மணி ஸ்கூட்டரில் நல்லாம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவர் சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் பழனியம்மாளிடம் சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறினர். அவர் வண்டியை நிறுத்திய போது ரசாயன பொடி தூவி அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றனர்.
பழனியம்மாளின் புகாரைத் தொடர்ந்து, ஆங்காங்கே உள்ள சிசிடிவி கேமரா பதிவின் மூலம் விசாரணையை துரிதப்படுத்தினர். இந்நிலையில் இரும்புலிக்குறிச்சி அருகே பைக்கில் சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் செந்துறை அருகே உள்ள பூமுடையான்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (27), மற்றொரு நபரின் பெயரும் ராஜேஷ் என தெரியவந்தது. இருவரும் இணைந்து கடந்த 1 வாரமாக தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
கொள்ளை சம்பவத்தின் போது பெண்களின் கண் தெரியாமல் இருப்பதற்காக கார்ன்பிளவர் மாவை தூவியதாகவும் கூறியுள்ளனர். கடன் தொல்லையால் இது போன்ற வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறினர் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்களை இரும்புலிக்குறிச்சி போலீசார் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
newstm.in