இன்று 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்! தேர்தலுக்காக அசத்தல் அறிவிப்புகள்! ஓபிஎஸ் அதிரடி!

இன்று 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்! தேர்தலுக்காக அசத்தல் அறிவிப்புகள்! ஓபிஎஸ் அதிரடி!

Update: 2021-02-23 10:20 GMT

 

தமிழக சட்டசபைக்கான தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், ஆளும் அதிமுக அரசு, தினந்தோறும் தமிழக வாக்காளர்களுக்கு சலுகைகளையும், அறிவிப்புகளையும் அள்ளி வீசிக் கொண்டிருப்பதாக எதிர்கட்சிகள் புகார் பட்டியலை வாசித்துக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கின்றார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். கவர்னர் உரையுடன் நடப்பாண்டிற்கான முதல் சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தும் சட்ட மசோதா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா என்று நான்காண்டுகளில் இல்லாத அவசர கதியில் காய் நகர்த்தி வருகின்றது அதிமுக அரசு. 

மே மாதத்துடன் இந்த ஆட்சிக்காலம் நிறைவடைவதை அடுத்து இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இன்று மீண்டும் கூடுகிறது. இன்று காலை 11 மணிக்கு, கலைவாணர் அரங்கத்தில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழகத்திற்கான பட்ஜெட்டை ஓபிஎஸ்., தாக்கல் செய்வது இது 10வது முறையாகும்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற இருக்கும்  நிலையில்,  வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக மகளிர் வாக்குகளைக் குறி வைத்து, இந்த இடைக்கால பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள் பல இடம்பெற்றிருக்கின்றன என்று கூறப்படுகிறது. சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன்  நிதித் துறைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக அது குறித்து விளக்கம் அளிப்பது வழக்கம். மேலும், சபாநாயகர் தலைமையில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்தும்  முடிவெடுக்கப்படும்.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் முதல்வர் எடப்பாடியால் திறந்து வைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே சட்டசபை மண்டபத்தில் 12 தலைவர்களின் படங்கள் இருக்கும் நிலையில்  தற்போது மேலும் 3 படங்கள் திறக்கப்படுவதன் மூலம், தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்த்தப்படுகிறது.

வரவிருக்கும் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த இடைக்கால பட்ஜெட் பார்க்கப்படுகின்றது. விவசாய கடன் தள்ளுபடி, போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து, இலவச கான்கிரீட் வீடுகள் என்று அசத்தலான அறிவிப்புகளால் ஏற்கெனவே தேர்தல் அரசியலில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் அதிமுக, இந்த பட்ஜெட் மூலமாக இன்னும் பல விசேஷ அறிவிப்புகளையும், வாக்காளர்களைக் கவரும் விதத்தில், குறிப்பாக மகளிர், மற்றும் முதல் முறை வாக்களிக்க இருப்பவர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளும் விதத்திலும் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News