பரபரப்பு.. பிரபல நடிகை மீது இரும்பு ராடால் தாக்குதல்.. ஆசிட் வீச முயற்சி..!
பரபரப்பு.. பிரபல நடிகை மீது இரும்பு ராடால் தாக்குதல்.. ஆசிட் வீச முயற்சி..!
‘பிரயாணம்’, ‘ஊசரவெலி’, ‘மிஸ்டர் ராஸ்கல்’ உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும், ‘பட்டேல் கி பஞ்சாபி ஷாதி’, ‘கொய் ஜானே நா’ உள்ளிட்ட ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளவர் பாயல் கோஷ். இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;
“சமீபத்தில், மும்பையில் காரில் சென்று கொண்டிருந்த என்னை சில மர்ம நபர்கள் சுற்றி வளைத்து தாக்க முற்பட்டனர். அவர்களிடமிருந்து தப்பிக்கவும், பொதுமக்களின் உதவியை நாடவும் நான் கத்தி கூச்சலிட்டேன்.
மர்ம நபர்களில் ஒருவன் இரும்பு ராடு கொண்டு எனது தலையை பதம் பார்க்க நினைத்த நிலையில், எனது கூச்சல் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூட ஆரம்பித்தனர். உடனடியாக அடிக்க ராடை ஓங்கிய நிலையில், என் கையை வைத்து தடுக்க முயன்றதில் வலது கையில் பலத்த அடி விழுந்தது.
மேலும், மர்ம நபர்களில் ஒருவன் கையில் வைத்திருந்த பாட்டிலில் ஏதோ திரவம் போன்ற பொருள் இருந்தது. அது ஆசிட்டாக இருக்குமோ என்கிற அச்சமும் எனக்கு ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தது பெரிய அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். என் வாழ்வில் இதுவரை இப்படியொரு தாக்குதலை சந்தித்ததில்லை. இனியும் சந்திக்கக் கூடாது என விரும்புகிறேன்.
அந்த மர்ம நபர்கள் குறித்த அடையாளம் எனக்கு தெரியவில்லை என்றாலும், இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப் போகிறேன். எதற்காக அவர்கள் என்னைத் தாக்க வந்தனர் என்பதும், இது யாருடைய செயல் என்றும் தெரியவில்லை” என, நடிகை பாயல் கோஷ் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ, பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தினார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருந்தார் நடிகை பாயல் கோஷ்.
ஆனால், நடிகை பாயல் கோஷின் புகாரை அனுராக் காஷ்யப் மறுத்து இருந்தார். நடிகை டாப்சி உள்ளிட்ட பிரபலங்கள் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.