கஜானா காலியான நிலையில் இது தேவையா..?; காட்டம் காட்டுகிறார் கமல்ஹாசன்..!
கஜானா காலியான நிலையில் இது தேவையா..?; காட்டம் காட்டுகிறார் கமல்ஹாசன்..!;
“ஒரு புறம், முந்தைய அதிமுக அரசு கஜானாவை காலி செய்து வைத்திருப்பதால் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் காலாவதியான சட்ட மேலவையை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சி செய்வது ஏற்புடையது அல்ல” என, கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மேலவையைக் கொண்டு வரும் முயற்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும், அடுத்து வரும் அதிமுக அந்த முயற்சியை முறியடிப்பதும் தொடர் நிகழ்வு.
வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில், மீண்டும் மேலவை தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வர உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் சட்டசபை உள்ளது. தமிழக அரசுக்கு வழிகாட்ட பல்வேறு ஆலோசனை குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட மேலவை என்பது தேவையில்லாத ஒன்று.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட இதர வசதிகள் இந்த மேலவை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் அமைச்சராகும் வாய்ப்பும் உருவாகும். புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களை புகுத்தி ஜனநாயகத்தின் மாண்பைக் குலைத்தது போலான முயற்சிகளை தமிழகத்தில் எக்காலத்திலும் எந்த வடிவிலும் அனுமதிக்கக்கூடாது.
ஒரு பக்கம் முந்தைய அதிமுக அரசு கஜானாவை காலி செய்து வைத்திருப்பதால், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் காலாவதியான சட்ட மேலவையை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சி செய்வது ஏற்புடையது அல்ல. கோவிட் பெருந்தொற்றினால், வருவாய் இழப்பு ஏற்பட்டு மாநிலம் தத்தளிக்கும் சூழலில் இந்த கவுரவப் பதவிகள் தேவையற்றவை” எனக் கூறியுள்ளார்.