சவுந்தர்யாவாக நடிக்கிறாரா சாய் பல்லவி..?
சவுந்தர்யாவாக நடிக்கிறாரா சாய் பல்லவி..?
தெலுங்கு சினிமாவில் மறைந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாகவுள்ள நிலையில், அவரது கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் வெளியான ’மனவார்லி பெல்லி’ என்கிற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சவுந்தர்யா. விரைவாகவே கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்தார். இந்தியில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
மேலும், அனைத்து திரையுலகத்தைச் சேர்ந்த ஸ்டார் நடிகர்களும் சவுந்தர்யாவுடன் நடிக்க ஆசைப்பட்டனர். தமிழில் ஒருநேரத்தில் தயாரான ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் அவர் நடித்தார். அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற ஸ்டார் நடிகர்களுடனும் நடித்துள்ளார்.மலையாளம், கன்னட சினிமாவிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. சவுந்தர்யா நடித்த பெரும்பாலான படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. கமர்ஷியல், கதையம்சம் கொண்ட படங்கள் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழடைந்தார்.
திருமணத்திற்கு பிறகு பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார் சவுந்தர்யா. இந்நிலையில் கடந்த 2004, ஏப்ரல் 17ம் தேதி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள பெங்களூருவில் இருந்து கரீம்நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உடல்கருகி உயிரிழந்தார். இதே விபத்தில் அவருடைய உடன்பிறந்த அண்ணன் அமர்நாத்தும் பலியானார்.
இந்நிலையில் இவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க தெலுங்கு சினிமாவின் பிரபல நிறுவனம் ஒன்று முயன்று வருகிறது. இதில் சவுந்தர்யாவாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சாய்பல்லவி சிரஞ்சீவி நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காகும். மேலும் சேகர் கம்மூலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி, வேனு உடுகலா இயக்கத்தில் விட்டாராபர்வம் உள்ளிட்ட படங்களிலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.