அதிமுக - பாஜக கூட்டணி முறிகிறதா ?உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி..!!
அதிமுக - பாஜக கூட்டணி முறிகிறதா ?உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி..!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் இடப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இடப்பங்கீடு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்தது. ஒட்டுமொத்தமாக 25 சதவீத இடங்களை எதிர்பார்த்ததாகவும், ஆனால் பாஜகவுக்கு 4 அல்லது 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக கொடுக்க முன் வந்ததாகவும் தகவல் வெளியானது. சென்னை ,கோவை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாஜக இடங்களை கேட்டதாகவும் ,அதற்கு அதிமுக தரப்பிலோ மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரபூர்வ அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து போட்டியிடும். தமிழகத்தில் தற்போது பாஜக தான் உண்மையான எதிர்க்கட்சி.நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணியாக களம் காண்போம். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனித்து போட்டியிடுகிறோம்.
நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கும், கூட்டணி முறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் மிகவும் விரும்பும் தலைவர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி; பாஜகவின் பொது எதிரி திராவிட முன்னேற்றக் கழகம் தான் " என்றார்.