மாநாடு படத்துக்கு மீண்டும் சோதனையா.. இந்த முறை முதலமைச்சருக்கே கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்

மாநாடு படத்துக்கு மீண்டும் சோதனையா.. இந்த முறை முதலமைச்சருக்கே கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்

Update: 2021-11-22 19:13 GMT

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு - கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘மாநாடு’.  பல தடைகளை தாண்டி இப்படம் இப்போது திரைக்கு வரவுள்ளது. அண்மையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பல கதைகளை கூறி நடிகர் சிம்பு கண்ணீர் விட்டார்.

இப்படம் வரும் 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மால்கள், தியேட்டர்கள், பொது இடங்களில் மக்களை அனுமதிக்கவேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது. வரும் 25 ஆம் தேதி மாநாடு வெளியாவதால், அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். 

அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அனைத்து திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. உலகம் முழுக்க இன்னும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயது கீழுள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுப்பிடிக்கப்படவில்லை. அவர்கள் பள்ளிகளுக்கும் பொது இடங்களுக்கும் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

உங்கள் ஆட்சியில் தடுப்பூசி முகாம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. நோய் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களைப் பாதுகாத்தே வருகின்றனர் மக்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கவேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும். ஆண்டிராய்டு போன் இல்லாதவர்கள்கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை தடுப்பூசி சான்றிதழ் எடுத்துவரச் சொன்னால் திரையரங்கம் வருவதை தவிர்ப்பார்கள். அதுவும், திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் பிறகு வரவே மாட்டார்கள்.

தயவு செய்து 18 வயதிற்கு கீழுள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல, விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழவைக்க வேண்டும். தமிழக அரசு விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும் திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன், என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


newstm.in

Tags:    

Similar News