மசாஜ் செய்யும் அறைகளில் சிசிடிவி கேமராவா? - உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு !!

மசாஜ் செய்யும் அறைகளில் சிசிடிவி கேமராவா? - உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு !!

Update: 2022-01-04 19:30 GMT

ஸ்பா, மசாஜ் நடைபெறும் அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த பயேல் பிஸ்வாஸ், குயின் ஆயுர்வேதிக்  ஸ்பா செண்டர் எனும் பெயரில் ஸ்பா மையம்  நடத்த NOC சான்றிதழ் வழங்க  உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

ஸ்பா மையம் தொடங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் ஏதுமில்லை. ஸ்பா தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவதோடு காவல்துறையினரின் தலையீட்டை தவிர்க்கவும் மனுவில் கோரியுள்ளார். 

கடந்த ஆண்டு  இது போன்ற வேறு ஒரு வழக்கில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவு நகலை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த உத்தரவில், ஸ்பா, மசாஜ் சென்டர்கள், தெரபி நடைபெறும் தனி அறைகளில் சிசிடிவி, கேமரா பொருத்த வேண்டும். அறை கதவு மூடப்பட்டு இருக்க கூடாது. வெளிப்படைதன்மையை கடைபிடிக்க வேண்டும்.சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தால்  காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. 

எனினும், அந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இருந்து வேறுபடுவதாக தெரிவித்த நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜனநாயகத்தில் தனி நபர் உரிமை முக்கியம். ஸ்பா, மசாஜ் நடைபெறும் அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது, தனிநபர் உரிமைக்கு  எதிரானது. மசாஜ், ஸ்பா மையங்களில் அலுவலக அறைகளில், மையத்திற்கு உள்ளே வருவோரை கண்காணிக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம்.

  
தனிநபர் உரிமை  பாதிக்கப்படாத வகையில் சிசிடிவிகேமராக்களை பொருத்த  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தடையில்லா சான்று வழங்க கோரிய மனுதாரரின் மனுவை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தடையில்லா சான்று வழங்குவது குறித்து  திருச்சி மாநாகராட்சி ஆணையர்  முடிவு எடுக்க  வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

newstm.in

Similar News