வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை !!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை !!

Update: 2022-01-02 12:01 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 2 மாதமாக மழை கொட்டி தீர்த்தது. சென்னை, கன்னியாகுமரி, வேலூர், தூத்துக்குடியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்பை விட இந்த மாதங்களில் அதிகமான மழை பொழிந்தது. இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். 

அது மட்டுமல்லாமல் காலை, இரவு நேரத்தில் பனிபொழிவு அதிகமாக இருந்து வந்தது. இதனால் இனி மழை இருக்காது என கருதப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் சென்னையில் கடந்த 30ஆம் தேதி மழை கொட்டி தீர்த்தது. காலை 11 மணிக்கு பெய்ய தொடங்கிய கன மழை தொடர்ச்சியாக இரவு 9 மணி வரை, சுமார் 10 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

திடீரென கொட்டி தீர்த்த மழையால் சென்னை வெள்ளக்காடானது. பல இடங்களில் சாலைகளில் மழை தேங்கியும் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். 

இந்த நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடற்கரையை ஒட்டி (4.2 முதல் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

இன்றும், நாளையும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

newstm.in

Similar News