எங்கள் பிள்ளைக்கு வேறு ஒருவர் பெயர் வைப்பது போல் உள்ளது..! - செல்லூர் ராஜூ
எங்கள் பிள்ளைக்கு வேறு ஒருவர் பெயர் வைப்பது போல் உள்ளது..! - செல்லூர் ராஜூ
மதுரை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை துரிதப்படுத்தக்கோரி ஆணையர் கார்த்திகேயனிடம், அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ மனு அளித்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அம்மா மினி கிளினிக் மூடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மதுரையில் பல ஆயிரம் கோடி திட்டங்களை 90% நிறைவேற்றி உள்ளது அதிமுக அரசு. அதை திமுக அரசு துவங்கி வைக்க இருக்கிறார்கள். நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறு ஒருவர் பெயர் வைப்பது போல் இருக்கிறது.
மதுரை, 2023 வளர்ந்த நகரமாக மாறிவிடும். உலகில் மிக உயர்ந்த நகரத்தில் மதுரையும் ஒன்றாக இருக்க வேண்டும். நாங்கள் துவங்கிய திட்டம் என்று திமுகவினர் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா இறப்பு சதவிகிதம் மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக அரசுபோல திமுக அரசு செயல்படவில்லை. ஆனால், ‘கொரோனா காலத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்’ என்று திமுகவினர் பெருமை பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் டில்லி சென்றுள்ளார். நீட் தேர்வு ரத்து, எழுவர் விடுதலை உள்ளிட்டவற்றில் வெற்றியுடன் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்” என, செல்லூர் ராஜூ தெரிவித்தார்.