ஜடேஜா, ஷமி அபாரம்: 85 ரன்களுக்கு சுருண்டது ஸ்காட்லாந்து !!
ஜடேஜா, ஷமி அபாரம்: 85 ரன்களுக்கு சுருண்டது ஸ்காட்லாந்து !!
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இந்திய அணி இன்று தனது 4ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து டாஸ் தோற்ற விராட் கோலி இன்று டாஸ் வென்றார். இன்று விராட் கோலிக்கு பிறந்தநாள் பரிசாக டாஸ்வென்றதாக சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் முன்சே மட்டும் சிறிது அதிரடியாக விளையாடி 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கைல் கோயேட்ஜர் 1 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
மிடில் ஆர்டர் ஓவரில் ஜடேஜா அபாரமாக பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 17ஆவது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன்அவுட் உள்பட மூன்று விக்கெட்டுகளை ஸ்காட்லாந்து இழந்தது. இறுதியாக ஸ்காட்லாந்து 17.4 ஓவரில் 85 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஷமி 3 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று ஷர்துல் தாகூர்க்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கொடுத்தும் அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.
newstm.in