கர்ணன் 3வது பாடல்: தனுஷ் குரலில் ”திரௌபதியின் முத்தம்”..!!
கர்ணன் 3வது பாடல்: தனுஷ் குரலில் ”திரௌபதியின் முத்தம்”..!!
ஏற்கனவே அறிவித்தது போல கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘திரௌபதியின் முத்தம்’ என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியான பாடல்களுக்கு கிடைத்தே அதே வரவேற்பு இந்த பாடலுக்கும் கிடைத்துள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது கர்ணன் படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக தனுஷ் நடித்துள்ளதை அடுத்து லால், ரஜிஷா விஜயன், கவுரி, லக்ஷ்மி ப்ரியா சந்திரமவுலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை வி க்ரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கர்ணன் படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. அதை அடுத்து கடந்த பிப். 18ம் தேதி படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்டா வரச்சொல்லுங்க..’ பாடல் வெளியானது.
கிடக்குழி மாரியம்மாள் குரலில் மாரி செல்வராஜ் வரிகளில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலாக பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வெளியானது. யுகபாரதி வரிகளில் இசையமைப்பாளர் தேவா மற்றும் ரீத்தா இருவரும் இணைந்து பாடி இருந்தனர்.
முதல் பாடலைப் போலவே இதற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு எழுந்தது. இதுவரை இல்லாத வகையில் தேவாவின் குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது. அதை தொடர்ந்து கர்ணன் படக்குழு ‘திரௌபதி முத்தம்’ என்கிற பாடலை இன்று வெளியிடுவதாக அறிவித்தது. முதல் இரண்டு பாடல்களும் மக்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், இந்த பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.
அதன்படி இன்று மாலை 4.04 மணியளவில் கர்ணன் படத்தின் ‘திரௌபதி முத்தம்..’ பாடல் வெளியிடப்பட்டது. இதை யுகபாரதி எழுதியுள்ள நிலையில், நடிகர் தனுஷூம் மற்றும் மீனாட்சி இளையராஜாவும் இணைந்து பாடியுள்ளனர். எதிர்பார்க்கப்பட்டது போல ரசிகர்கள் மத்தியில் இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு எழுந்து வருகிறது. வரும் ஏப்ரல் 9ம் தேதி கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.