டெல்லியில் அடுத்தவாரம் முதல் கட்டுப்பாடுகள் தளர்வு.. கெஜ்ரிவால் அறிவிப்பு !!
டெல்லியில் அடுத்தவாரம் முதல் கட்டுப்பாடுகள் தளர்வு.. கெஜ்ரிவால் அறிவிப்பு !!
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனைத் தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. எனினும் கொரோனாவின் பரவல் தீவிரமாக இருந்தது.
மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நிரம்பி வழிந்தன. இறப்புகள் அதிகரித்தது. இதன்காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கி அரசு ஊரடங்கை அடுத்தடுத்து நீடித்து வந்தது. இதன்பலனாக டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, வரும் மே 31ஆம் தேதி முதல் அதாவது திங்கள் கிழமையில் இருந்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால், டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கள் கிழமை காலை 5 மணி வரை உள்ளது. அதன்பிறகு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த உள்ளோம். திங்கள் கிழமை முதல் கட்டுமானப்பணிகள், தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
அன்றாடம் ஊதியம் பெறுபவர்களை மனதில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 1.5 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,100 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளை பெற்று ஒவ்வொரு வாரமும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என அவர் கூறினார்.
எனினும் தொற்று பாதிப்பு மீண்டும் உயர்ந்தால் தளர்வுகளை நிறுத்திவைப்போம் என கூறிய அவர் தொற்று குறைந்தது என அலட்சியம் காட்டாமல் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
newstm.in