முகம் எரிக்கப்பட்ட நிலையில் கேரளாவை சேர்ந்த இளம்பெண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவாப்பட்டி அடுத்த மேல்கொட்டாய் மலையடிவார பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினர். 

முகம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சனி (25) என்பது தெரியவந்தது. மேலும் அவரது சடலம் அருகே செல்போன், கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடிதத்தில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும் எழுதியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

எனினும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியப்போது இளைஞர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது, காவேரிப்பட்டணத்தை அடுத்த வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா (22) என்ற இளைஞர், ஐந்து ஆண்டுகளாக பேஸ்புக்கில் ரஞ்சனியுடன் பழகிவந்துள்ளதாக கூறப்படுகிறது. கார் டிரைவரான சூர்யா அப்போது கேரளாவிற்கு சென்று நகை, பணத்தை வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் ரஞ்சனியுடன் தொடர்பை துண்டித்த சூர்யா, வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

 

சூர்யாவை தேடி ரஞ்சனி அவரது ஊருக்கு வந்த நிலையில், அவருக்கு  ஏற்கனவே திருமணமானது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கேரளாவுக்கு திரும்பாமல் காவேரிப்பட்டிணம் சூப்பர் மார்கெட்டில் கடந்த நான்கு மாதமாக வேலை பார்த்து வந்த நிலையில், முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலையா அல்லது கொலையா என  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பெண்ணுடன் பழகி வந்த இளைஞருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

    

Tags: