லக்கிம்பூர் வன்முறை: உ.பி. அரசு செயலால் உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி !!

லக்கிம்பூர் வன்முறை: உ.பி. அரசு செயலால் உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி !!

Update: 2021-10-08 20:35 GMT

லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராடினர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீசார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சரின் மகன் தலைமறைவாக உள்ளார். லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அமர்வு கூறுகையில், லக்கிம்பூர் கெரி கலவர விவகாரத்தில் உ.பி. அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை. பொறுப்பான அரசு, போலீசாரை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தீவிரமானது, சிலருக்கு குண்டுகாயம் ஏற்பட்டுள்ளது.

உ.பி. அரசு உங்களிடம் என்ன செய்தியை சொல்லி அனுப்பியுள்ளார்கள். சாதாரண சூழலில் போலீசார் உடனடியாகச் செல்லமாட்டார்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யவும் மாட்டார்கள். இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டாலும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த வழக்கில் எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஐபிசி 302 பிரிவில் கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள். 

கொடூரமான கொலை வழக்கை இப்படித்தான் கையாள்வதா?  உத்தரபிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.  இப்படித்தான் மற்ற வழக்கிலும் நடந்து கொள்வீர்களா. இந்த வழக்கை இப்போதே சிபிஐக்கு மாற்ற முடியாது. வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம், என உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 
newstm.in

Tags:    

Similar News