ஆக்கப்பூர்வ பணிகளில் கவனம் செலுத்துவோம்! உதயநிதி ஸ்டாலின்!!
ஆக்கப்பூர்வ பணிகளில் கவனம் செலுத்துவோம்! உதயநிதி ஸ்டாலின்!!
கர்ணன் படத்தில் கொடியன்குளம் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட வருடத்தில் கருணாநிதி ஆட்சி நடந்தது. ஆனால் அந்த சம்பவம் நடந்ததோ 1995ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சியில். இது குறித்து திமுகவினர் எதிர்ப்புக்குரல் தெரிவித்த நிலையில் தயாரிப்பாளர் தாணு, நடிகர் தனுஷ், இயக்குனர் மாரிசெல்வராஜிடம் பேசினார் உதயநிதி ஸ்டாலின். ஆண்டு தவறாக காட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். சரி செய்வதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.
1997 என்பதை மாற்றி 90களின் இறுதியில் என்று மாரி செல்வராஜ் மாற்றியும் விட்டார். 90களின் இறுதி என்பதும் கருணாநிதி ஆட்சியையே சுட்டிக்காட்டுவதாக மீண்டும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து விட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
“கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.
படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை.அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
newstm.in