வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்.. குழந்தைகளுக்கு அரசு சலுகை..!
வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்.. குழந்தைகளுக்கு அரசு சலுகை..!
ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் டிப்போவுக்கு சொந்தமான அரசு பேருந்து நவம்பர் 30-ம் தேதி வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. பெத்த கொத்தப்பள்ளி கிராமம் அருகே பேருந்து சென்றபோது அதில் இருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அந்த பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பெண் பயணிகள் சிலர் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதேபோல், டிசம்பர் 7-ம் தேதி சித்திப்பேட்டை அருகே தெலுங்கானா மாநில அரசுப் பேருந்து சென்றபோது, அதில் பயணம் செய்த மற்றொரு கர்ப்பிணிக்கும் பெண் குழந்தை பிறந்தது.
இந்த இரண்டு இடங்களிலும் தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு தாய் மற்றும் சேய்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓடும் பேருந்தில் பிறந்த இந்த இரண்டு குழந்தைகளுக்கும் பிறந்தநாள் பரிசாக அவர்கள் இருவரும் தெலுங்கானா மாநில அரசு பேருந்தில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதற்கான அனுமதிச் சீட்டுகளை தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜனார், குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கியுள்ளார்.