இனி தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே மதுபானம்.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி..!
இனி தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே மதுபானம்.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி..!
‘கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவேண்டும்’ என, திருவள்ளூர் மாவட்ட மதுபான கடைகளுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடை பணியாளர்களுக்கு மாவட்ட மேலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அத்துடன், மதுபான கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சரிபார்த்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வாடிக்கையாளருக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது.
மேலூம், மதுபான கடையின் முகப்பில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வாடிக்கையாளருக்கு மட்டுமே இங்கு மதுபானம் விற்பனை செய்யப்படும்’ என்ற வாசகம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.