ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல்: சிஎஸ்கே தேர்வு செய்த 4 வீரர்கள் யார் யார் ?
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அண்மையில் முடிந்த நிலையில், அடுத்தாண்டுக்கான ஐபிஎல் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. அதாவது ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னோ அணியை கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கும், அகமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் வாங்கியுள்ளது.
ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான பணிகளில் அணிகள் இறங்கியுள்ளன. பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. 8 அணிகள் தக்கவைக்கும் 4 வீரர்களில் மூவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். அல்லது தலா இரு வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களாகவும் இருக்கலாம். இரு புதிய அணிகள் தேர்வு செய்யும் மூன்று வீரர்களில் இருவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். 8 அணிகளும் நவம்பர் இறுதிக்குள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ கூறியிருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிக்காக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்
சிஎஸ்கே: தோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி
மும்பை: ரோஹித் சர்மா, பும்ரா
கொல்கத்தா: சுநீல் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்
ஆர்சிபி: விராட் கோலி, மேக்ஸ்வெல்
டெல்லி: ரிஷப் பந்த், பிருத்வி ஷா, அக்ஷர் படேல், நோர்கியா
சன்ரைசர்ஸ்: கேன் வில்லியம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன்
பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் வேறொரு அணிக்குத் தலைமை தாங்க விருப்பம் தெரிவித்துள்ளதால், பஞ்சாப் அணி தக்கவைக்க எந்தவொரு வீரரையும் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் அணிகள் தங்களுடைய பட்டியலை பிசிசிஐயிடம் அளிக்க இன்றே கடைசித் தேதி. இதையடுத்து, 2022 ஐபிஎல் போட்டிக்காக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பற்றிய அதிகாரபூர்வப் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in