உள்ளாட்சித் தேர்தல்: கள்ள ஓட்டு போடுவதை தடுக்க கட்டம்கட்டிய தேர்தல் ஆணையம்.. கடுமையான ஏற்பாடுகள் !!
உள்ளாட்சித் தேர்தல்: கள்ள ஓட்டு போடுவதை தடுக்க கட்டம்கட்டிய தேர்தல் ஆணையம்.. கடுமையான ஏற்பாடுகள் !!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டுக்களை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது, பிப்ரவரி 22ஆம் தேதி தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்துகிறது.
மேலும், தேர்தலின்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும், வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்திடவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களால் கண்டறியப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமிரா (CCTV) / நுண் பார்வையாளர்கள் (micro observer) / இணையதள கண்காணிப்பு (web streaming) ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.
பதட்டமான வாக்குச்சாவடிகள் web streaming மூலம் கண்காணிக்கவும் அவ்வாறு web stream அமைக்கப்பட இயலாத வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமரா (CCTV) உடன் மத்திய அரசு நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்களை நுண் பார்வையாளர்களாக (micro observer) நியமித்து கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதர அனைத்து வாக்குச்சாவடிகளிலும் CCTV மூலம் கண்காணித்திட உரிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள Strong room (உட்புறம் மற்றும் வெளிப்புறம்) மற்றும் வாக்கு எண்ணும் கூடங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணுகை நடவடிக்கைகளை கண்காணிக்க உரிய ஆணைகள் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளன, இவ்வாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
newstm.in