மதுரையில் பரபரப்பு.. டம்மி பணத்துடன் வந்து மனுதாக்கல் செய்த வேட்பாளர்..!

மதுரையில் பரபரப்பு.. டம்மி பணத்துடன் வந்து மனுதாக்கல் செய்த வேட்பாளர்..!

Update: 2022-02-01 06:30 GMT

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர் சங்கரபாண்டியன். சமூக ஆர்வலரான இவர், மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது, ‘ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம்; வாக்களிப்பது ஜனநாயக கடமை’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகையை கையில் ஏந்தியபடி, தாம்பாளத் தட்டில் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் டம்மி பணத்தை கட்டுக்கட்டாக அடுக்கி வைத்தபடி வந்தார்.


மண்டல அலுவலகத்தின் நுழைவு வாசல் வரை டம்மி பணம் மற்றும் பதாகைகளுடன் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பு மனுவுடன் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. வாக்காளர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களித்தால் அது டம்மி பணத்தை போன்று டம்மியான, மதிப்பில்லாத வாக்காக மாறிவிடும்.

வாக்காளர்களுக்கு அதனை உணர்த்தும் வகையில் இது போன்று டம்மி பணத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். வாக்காளர்கள் நல்ல வேட்பாளர்களாகப் பார்த்து, பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும். அதுவே என் விருப்பம்” எனத் தெரிவித்தார்.

சுயேட்சை வேட்பாளர் ஒருவர் டம்மி ரூபாய் நோட்டுகளுடன் வந்து நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News