மாயமான பிரபல பாடகர் சடலமாக மீட்பு..!
மாயமான பிரபல பாடகர் சடலமாக மீட்பு..!
இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றபோது பள்ளத்தாக்கில் தவறி விழுந்து மாயமான பிரபல பாடகர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில், அங்குள்ள கட்டடங்கள், விடுதிகள், கடைகள் சேதமடைந்துள்ளன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக, சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாக்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த பிரபல சூஃபி பாடகர் மன்மீத் சிங். இவர், ‘Sain Brothers’ என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார். மன்மீத் சிங், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் கடந்த திங்கட்கிழமை இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு, தர்மசாலா அருகில் உள்ள ஷாஹ்பூர் பகுதியில் தங்கியிருந்த அவர், புகழ் பெற்ற கரேரி ஏரி பகுதிக்குச் சென்றார்.
அப்போது அவர், மழை காரணமாக திடீரென தவறி பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், அவர் சகோதரரும் நண்பர்களும் போலீசில் புகார் செய்தனர். போலீசார், மாயமான மன்மீத் சிங்கை தேடி வந்தனர். இந்நிலையில், உள்ளூர் மக்கள் உதவியுடன், பள்ளத்தாக்கில் இருந்து அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.
மன்மீத் சிங்கின் மரணம் அவருடைய உறவினர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மன்மீத் சிங் மறைவுக்கு அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.