மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ!

மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ!

Update: 2021-05-22 12:05 GMT

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தபோதிலும், மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். எனவே, அவர் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமானால், 6 மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர் போட்டியிடும் தொகுதி தொடர்பாக கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சோவன்தேவ் சாட்டர்ஜி ராஜினாமா செய்தார். மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் பீமன் பானர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து பவானிபூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். அந்த தொகுதியில் மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜினாமா பற்றி சபாநாயகர் கூறுகையில், “அவர் தானாக முன்வந்து, மற்றவர்களின் வற்புறுத்தல் இல்லாமல் ராஜினாமா செய்தாரா என்று அவரிடம் விசாரித்தேன். அவர் கொடுத்த விளக்கம் எனக்கு திருப்தி அளித்தது. எனவே, அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

ராஜினாமா குறித்து சோவன்தேவ் சாட்டர்ஜி கூறியதாவது, “முதல்வர் பவானிபூர் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருந்தார். இப்போது முதல்வர் போட்டியிடக்கூடிய தொகுதி குறித்து கட்சியின் அனைத்து தலைவர்களும் கலந்துரையாடினார்கள்.

முதல்வர் இங்கிருந்து (பவானிபூர்) போட்டியிட விரும்புகிறார் என கேள்விப்பட்டேன். உடனே நான் எனது தொகுதியை காலியாக வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இதில் எந்த அழுத்தமும் இல்லை. ஆட்சியை திறம்பட நடத்த வேறு யாருக்கும் தைரியம் இல்லை. எனவே, நான் முதல்வரிடம் பேசினேன். இது அவரது தொகுதி. நான் அதை பாதுகாத்துக் கொண்டிருந்தேன், அவ்வளவுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News