இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி! - இனி அவர் தான் முதலமைச்சர் !!
இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி! - இனி அவர் தான் முதலமைச்சர் !!
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
தேர்தல் கமிஷன் விதிகள்படி எம்.எல்.ஏ. பதவிகளில் இல்லாதவர்களும் முதலமைச்சராக பதவி ஏற்கலாம். ஆனால் அவர்கள் 6 மாத காலத்துக்குள் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் மம்தா பானர்ஜி நவம்பர் 5ஆம் தேதிக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.
அவரது பாரம்பரிய தொகுதியான பவானிபூர் தொகுதியில் சோபன் தேவ் சட்டோபாத்யாயா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். அவர் மம்தா பானர்ஜிக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பெண் வக்கீல் பிரியங்கா டிப்ரிவாலை பா.ஜனதா வேட்பாளராக அக்கட்சி நிறுத்தியது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் நிறுத்தப்பட்டார். அவர்கள் தவிர மேலும் 9 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இதில் மம்தா பானர்ஜிக்கும், பிரியங்கா டிப்ரிவாலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த மாதம் 30-ந்தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தது. 57 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது. பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பாதுகாப்புடன் இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்தார்.
மம்தா பானர்ஜி முதல் சுற்றில் 5,333 ஓட்டுகளும், பிரியங்கா டிப்ரிவால் 2,956 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். மம்தா பானர்ஜி 2,377 ஓட்டுகள் முன்னிலை பெற்றிருந்தார். 2-வது சுற்றில் 14,284 ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜிக்கு 9,974 ஓட்டுகளும், பிரியாவுக்கு 3,828 ஓட்டுகளும் கிடைத்து இருந்தன. 2-வது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி 6,146 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.
20-வது சுற்றில் பாஜகவின் பிரியங்கா டிப்ரிவாலை விட 56,388 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவரது பதவிக்கு இருந்த ஆபத்து நீங்கியது.
newstm.in