கலைஞரின் நீங்கா நினைவுகளைப் பேசும் நினைவு சின்னங்கள்!
கலைஞரின் நீங்கா நினைவுகளைப் பேசும் நினைவு சின்னங்கள்!
ஓய்வறியா சூரியனாக தன் வாழ்நாள் முழுவதும் ஜொலித்து கொண்டிருந்த கலைஞர், தனக்குப் ப்ரியமான அண்ணாவின் அருகில் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தான் கையில் எடுத்துக் கொண்ட எந்த போராட்டத்திலும் தோல்வியையே காணாத போராளியான கலைஞரின் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
கோவலன் - கண்ணகி கலைக்கூடம்
சோழர் கால இலக்கியங்கள் மீது காதல் கொண்ட கருணாநிதி, சிலப்பதிகார கதாபாத்திரமான கண்ணகி, கோவலன் வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினம் நகரத்தின் 7 தெருக்களை நினைவுப்படுத்தும் விதமாக 7 அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடனும், கலைநயத்துடனும் சிலப்பதிகாரக் கலைக்கூடத்தை கட்டினார்.
சிலப்பதிகார இலக்கியத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் சிலைகளாக வடிவமைக்கப்பட்டது. கண்ணகியையும், தமிழையும் கௌரவப்படுத்தும் விதமாக பூம்புகாரில் எழுப்பப்பட்ட இந்த கலைக்கூடம் மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி மாணவர்களால் வடிக்கப்பட்டது
வள்ளுவர் கோட்டம்
திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் வள்ளுவர் கோட்டம். இது சென்னையில் அண்மையில் அமைந்துள்ளது. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டட பணிகள் தொடங்கப்பட்டு 1976-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் கோயிலின் திருத்தேர் உருவத்தில் 128 அடி உயரத்தில் சிற்பத்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இத்தேரின் கீழ் பகுதியில் உள்ள சிற்பங்கள் திருக்குறளின் கருத்துகளை விளக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை
தமிழுக்கு தன்னிகரல்லா தலைவனாக விளங்கிய முத்தமிழ் அறிஞர் கருணாநிதி, திருவள்ளுவரை சிறப்பிக்கும் பொருட்டு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலையை நிறுவினார். கடலுக்கு நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, ஜனவரி 1 இல் திறக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலைக்கு கீழே அமைந்துள்ள மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
செம்மொழிப் பூங்கா
சென்னை ஜெமினி மேம்பாலத்திற்கு அருகே 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். பரப்பரபான சிட்டிக்கு மத்தியில் குளுகுளு மரங்களுடனும், பசுமையான செடிகளுடனும், எழுல் கொஞ்சும் சூழலுடனும் ரூ. 8 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான் திறக்கப்பட்டது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
தமிழக மக்களால் அன்புடன் "அண்ணா" என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி. என். அண்ணாதுரையின் 102வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியன்று டாக்டர். மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. ஆசியாவின் முகப்பெரிய நூலகமாக கருதப்படும் இந்த நூலகத்தில் 8 தளங்கள் உள்ளன. சுமார் 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அண்ணா நூலகம், யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.