10 லட்சம் பேருக்கு பால் அட்டைகள்.. ஆவின் நிறுவனம் திட்டம்..!
10 லட்சம் பேருக்கு பால் அட்டைகள்.. ஆவின் நிறுவனம் திட்டம்..!
சென்னையில், ஆவின் நிறுவனம் மூலம் நாள் தோறும் 13.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, 900 விற்பனை மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம், 12 லட்சம் நுகர்வோர்களுக்கு பால் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு 6 லட்சம் லிட்டர் பால் வரை நாள்தோறும் வழங்கப்படுகிறது.
நீல நிற பால் பாக்கெட்டுக்கு 3 ரூபாய், பச்சை மற்றும் ஆரஞ்ச் நிற பாக்கெட்டுகளுக்கு 2 ரூபாய்க்கும் குறைவாக நுகர்வோர்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதும், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த சலுகையும் பால் அட்டைதாரர்களுக்கு கிடைத்து வருகிறது.
பால் கொள்முதல் அதிகரித்துள்ளதால், பால் பவுடர் மற்றும் வெண்ணெய் டன் கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன. எனவே, சென்னையில் பால் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பொது மக்களை கவரும் வகையில் பால் அட்டைகள் தாராளமாக வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது.
இதற்காக, ஜனவரி 2 முதல் 15ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ஆவின் விற்பனை மையங்களில் மட்டுமின்றி 27 மண்டல அலுவலகங்களிலும் நுகர்வோருக்கான பால் அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
அரசு அங்கீகரித்துள்ள 12 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொடுத்து, பால் நுகர்வோர் அட்டைகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வாயிலாக 10 லட்சம் பேருக்கு பால் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.