மாணவர்களை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்துவது பற்றி யோசிக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்துவது பற்றி யோசிக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2021-06-14 13:36 GMT

“நேரடியாக வகுப்புகளை தொடங்குவது பற்றி தற்போது யோசிக்கவில்லை. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள் நடத்தப்படுவது தொடரும்” என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால்  மாணவர்கள் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை.

மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு ஒரு வாரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் இரண்டு தவணையாக வசூலிக்க வேண்டும். கொரனோ பரவல் குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டால் ஒரு வகுப்புக்கு எத்தனை மாணவர்களை அமர வைப்பது என்பது பற்றி ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளை தொடங்குவது பற்றி தற்போது யோசிக்கவில்லை. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள் நடத்தப்படுவது தொடரும். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தளர்வுகளைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். பத்தாம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் இருக்காது; அதற்கு பதில், ‘மாணவர் ஆல் பாஸ்’ என்று மட்டுமே இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News